ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்தது.
ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்ற வருகிறது. இன்றோடு 12 அணிகள் பங்கேற்று வந்த சூப்பர் 12 சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைகிறது. ஏற்கனவே குரூப் 1 பிரிவிலிருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு சென்றுள்ளது. இன்று மொத்தம் 3 போட்டிகள் நடைபெறுகிறது. அதில் முதலில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்ததால் தென் ஆப்பிரிக்க அணி அரையிறுதியை விட்டு வெளியேறியது. தொடர்ந்து அதே மைதானத்தில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை பாகிஸ்தான் வீழ்த்தி அரையிறுதிக்கு சென்றது.
அதாவது, குரூப் 1 பிரிவிலிருந்து நியூஸிலாந்து, இங்கிலாந்து மற்றும் குரூப் 2 பிரிவிலிருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு சென்றுள்ளது. இந்நிலையில் சூப்பர் 12 ன் கடைசி ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு மோதியது.இந்த போட்டியில் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார்.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியில் துவக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கே எல் ராகுல் இருவரும் கலந்து இறங்கினர். இதில் ரோகித் சர்மா 15 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து கே எல் ராகுல் மற்றும் விராட் கோலி ஜோடி சேர்ந்து இருவரும் சிறப்பாக ஆடினர். அதன்பின் 12ஆவது ஓவரில் விராட் கோலி 26 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். தொடர்ந்து சிக்கந்தர் ராசா வீசிய 13வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்து அரை சதம் அடித்த கே.எல் ராகுல், அடுத்த பந்தையும் தூக்கி அடிக்க முயன்று மசகட்சாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 35 பந்துகளில் (3 பவுண்டரி, 3 சிக்ஸர்) 51 ரன்கள் எடுத்த ராகுல் அவுட் அவுட் ஆனதை அடுத்து வந்த ரிஷப் பண்ட் 3 ரன்னில் ஏமாற்றினார். இதையடுத்து சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் ஜோடி சேர்ந்தனர்.
இதில் பாண்டியா ஒருபுறம் பொறுமையாக ஆட சூர்யகுமார் யாதவ் வழக்கம் போல அதிரடி காட்டினார். கடைசி 4 ஓவரில் சூர்யகுமார் அதிரடி காட்ட ரன் எகிறியது. குறிப்பாக நகர்வா வீசிய கடைசி ஓவரில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி என சூர்யகுமார விளாசஅந்த ஓவரில் 21 ரன்கள் கிடைத்தது. இருப்பினும் பாண்டியா கடைசி ஓவரின் 2ஆவது பந்தில் 18 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 61 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். இதையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 9 ஓவரில் 47/5 என தடுமாற்றத்துடன் ஆடி வருகிறது.