தகராறு செய்ததை தட்டி கேட்டதால் குடி போதையில் வாலிபர் போலீஸ்காரரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள குற்றப்பிரிவு போலீஸ்காரராக கானத்தூர் காவல் நிலையத்தில் சதீஷ்குமார் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷ்குமார் காவல் நிலையத்திற்கு பக்கத்தில் இருக்கும் ஒரு டீ கடைக்கு சென்றபோது, அங்கு ஒரு வாலிபர் குடிபோதையில் தகராறு செய்துள்ளார். இதனை பார்த்ததும் போலீஸ்காரர் சதீஷ்குமார் அதனை தட்டி கேட்டுள்ளார்.
அப்போது கோபமடைந்த அந்த வாலிபர் சதீஷ்குமாரை சரமாரியாக தாக்கியதால் அவரின் இடது கை முறிந்து விட்டது. இதனையடுத்து காயமடைந்த சதீஷ்குமாரை கானத்தூர் காவல் துறையினர் மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஹரிஹரன் என்ற அந்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.