இளம் பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாவட்டத்திலுள்ள பட்டினப்பாக்கம் பகுதியில் கபில்தேவ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதில் பட்டினப்பாக்கம் சர்வீஸ் சாலையில் விக்னேஸ்வரி டிபன் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். கடந்த 1 வருடத்திற்கு முன்பு விக்னேஸ்வரிக்கு நீலாங்கரை காவல் நிலையத்தில் வேலை பார்க்கும் போலீஸ்காரராக முகிலன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனால் விக்னேஸ்வரியும், போலீஸ்காரரான முகிலனும் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விக்னேஸ்வரி கடந்த 23-ஆம் தேதி தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் விக்னேஸ்வரி முகிலனுடன் ஒன்றாக இருக்கும்போது “எனது கணவர் கபில்தேவ் அடிக்கடி தகராறு செய்கிறார் எனவும், அதனை நீங்கள் தட்டி கேட்க மாட்டீர்களா?” எனவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதற்கு விவாகரத்து வழக்கில் உத்தரவு வந்தவுடன் கபில்தேவ் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்போம் என முகிலன் கூறியும் அதனை விக்னேஸ்வரி ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து முகிலின் கழிப்பறைக்கு சென்ற சமயத்தில் விக்னேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். எனவே விக்னேஸ்வரியை தற்கொலைக்கு தூண்டியதாக காவல்துறையினர் முகிலன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.