கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால், பணி இழந்த இளைஞர் தற்போது கோடீஸ்வரராக மாறியிருக்கிறார்.
செனகல் நாட்டின் குடிமகனான, Khaby Lame என்ற 21 வயது இளைஞர், தான் சிறுவயதாக இருந்தபோதே, இத்தாலியில் குடியேறிவிட்டார். எனவே, அங்குள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கொரோனாவினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அவரின் பணி பறிபோனது.
எனவே, வறுமையில் தவித்து வந்த அவர், பொழுதுபோக்கிற்காக Tiktok-ல் வீடியோ பதிவிட தொடங்கியுள்ளார். தற்போது, டிக்-டாக்கிலேயே, இரண்டாம் அதிகம் பின்பற்றப்படும் நபராக மாறி விட்டார். முதலில், பிறரைப் போல சாதாரணமான வீடியோக்கள் தான் பதிவிட்டிருக்கிறார். அதன்பின், தன் செய்கையால் பலரை ஈர்த்துள்ளார்.
இதில் குறிப்பாக வாகனத்தின் கதவின் இடுக்கில் சிக்கிக் கொண்ட சட்டையை எப்படி எடுக்கலாம் என்ற வீடியோ அதிக பிரபலம் அடைந்தது. இந்த வீடியோ, தற்போது வரை 158 மில்லியன் பார்வைகளை பெற்றிருக்கிறது. அதன்பின்பு, அவர் பதிவேற்றும் அனைத்து வீடியோக்களும் லட்சக்கணக்கில் பார்வையாளர்களை பெற்றிருக்கிறது.
டிக் டாக் மட்டுமல்லாமல், இவரின் முகபாவனைகள் மீம்ஸ் உருவாக்குபவர்களுக்கும் உதவியாக இருந்துள்ளது. இவ்வாறு தான் இவர் பிரபலமடைந்திருக்கிறார். தொடர்ந்து பல வாய்ப்புகள் இவரை தேடி வந்திருக்கிறது. உலகில் முன்னணி நிறுவனங்களும் இவரை விளம்பரங்களில் நடிக்க வைக்கிறது. இதனால் அதிக வருவாய் ஈட்டும், இவரின் சொத்து மதிப்பு 20 கோடியைத் தாண்டியிருக்கிறது.
எனினும், இவர், தான் தற்போதும் வாழ்க்கையில் சரியான இடத்தை அடையவில்லை. இவ்வளவு வருடம் இத்தாலியில் வசித்தாலும் இத்தாலி பாஸ்போர்ட் என்னிடமில்லை. செனகல் நாட்டின் பாஸ்போர்ட் தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். எனவே இவரால் அமெரிக்காவிற்கு சென்று பணியாற்ற முடியாது. மேலும், தன் அம்மாவிற்காக ஒரு வீடு கட்ட வேண்டும் என்று தான் ஆசைப்படுவதாக கூறியிருக்கிறார்.