ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் பேசிய கவி பேரரசு வைரமுத்து, ஹிந்தி திணிப்புக்கு எதிராக இப்போதெல்லாம் மேடைகளில் எதையும் பேசிவிட முடியாது. ஊடகம் விழிப்போடு இருக்கிறது, மக்கள் விழிப்போடு இருக்கிறார்கள், சட்டம் விழிப்போடு இருக்கிறது, அரசு விழிப்போடு இருக்கிறது. அதனால் ஒரு மேடையில் பேசுகிறவன், தனி வெளியில் பேசுகிறபவன் கூட.. இன்றைக்கு சாட்சி இல்லாமல் பேச முடியாது.
இப்படி இந்த முந்திரி பருப்புக்கதை சொல்கிறேனே… இதற்கு சாட்சி உண்டா வைர முத்து என்று என்னை பார்த்து கேட்டால் ? வடமொழிகளில் நான்கு, ஐந்து மொழிகளை சொல்ல முடியும். மராட்டிய மொழிக்குள் இந்தி மெல்ல நுழைந்தது, இந்தி வேறு மராட்டியம் மொழி வேறு என்று ஆகாதபடி இரண்டும் உறவாடின.
இப்போது பார்த்தால் மராட்டியம் தன் முகத்தையும், கலாச்சாரத்தையும் இழந்திருக்கிறது. அதனுடைய தனித்தன்மை மெல்ல மெல்ல தேய்ந்து கொண்டிருக்கிறது. இது தேய்ந்து கொண்டு இருக்கிறது என்று சொல்லுகிறேன், தேய்ந்தே போய்விட்டதற்கு சில சாட்சிகள் உண்டு. போஜ்புரி, மகத்தி, மைதிலி, அவாதி, சாஸ்திரி இந்த மொழிகள் எல்லாம் வட இந்திய மொழிகள்.
இந்தி மொழி தன்மை என்ன செய்து விடப் போகிறது ? என்று அந்த மொழியை தங்களுக்குள் அனுமதித்த மொழிகள்…. காலப்போக்கில் என்ன ஆகின ? மூலமொழி சிதைந்து, திரிந்து, அழிந்து, கழிகிறது. அந்த இடத்தில் இந்தி வந்து உட்காருகிறது. இதுதான் நடக்கிறது. தமிழுக்கும் இப்படி நேர்ந்துவிடும் என்று பலபேர் கனவு காண்கிறார்கள் என தெரிவித்தார்.