சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில், யோகி ஆதித்யநாத் சார்பில் பாஜக எம்.பி ஹர்நாத் சிங் யாதவ் முக்கிய கோரிக்கை வைத்திருக்கிறார்.
உத்திரபிரதேசத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே, பாஜக, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, காங்கிரஸ் போன்ற கட்சிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளது. இந்நிலையில் பாஜகவின் தேசிய தலைவரான ஜேபி நட்டாவிற்கு, யோகி ஆதித்யநாத்தின் ஆதரவாளர் மற்றும் பாஜகவின் எம்பியாக இருக்கும் ஹர்நாத் சிங் யாதவ் ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார்.
அதில் கிருஷ்ண கடவுளால் அதிகமாக கவரப்பட்டவர் யோகி ஆதித்யநாத். எனவே, ஸ்ரீ கிருஷ்ண ஜென்ம பூமியின் வேட்பாளராக அவர் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு வலியுறுத்தியிருக்கிறார். கடந்த ஜனவரி முதல் தேதி, பத்திரிக்கையாளர்களிடம் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது, “வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் நான் கட்டாயம் போட்டியிடுவேன். ஆனால் எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பதை கட்சி மேலிடம் தான் தீர்மானிக்கும். அவர்கள் எந்த தொகுதியில் களம் இறங்கச் சொன்னாலும் அங்கு போட்டியிடுவேன்” என்று கூறியிருக்கிறார்.
இந்நிலையில் அவர் தொகுதியை குறிப்பிட்டு கூறாவிட்டாலும் அவரின் ஆதரவாளர் மூலமாக மதுரா சட்டமன்ற தொகுதிக்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத் துண்டு போட முயல்கிறார் என்று கூறப்படுகிறது. அவரின் மீது பல விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. எனினும் அவருக்கு ஆதரவாக மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.