தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் பெருமளவு பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டாலும், சென்னையில் மக்கள் மழை நீரால் அவதிப்பட்டு தண்ணீரில் தத்தளிப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் கடந்த 2-ம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் ஒருநாள் மழைக்கே சென்னையில் உள்ள மக்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றனர். குறிப்பாக கொளத்தூர் தொகுதியில் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் விடிய விடிய தூங்காமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மழைநீர் வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் தண்ணீர் போவதற்கு வழி இன்றி சாலைகளில் குளம் போல் தண்ணீர் பெருகி இருக்கிறது என்று குறிப்பிடபட்டிருந்தது. இந்நிலையில் இன்று தமிழக அரசை கேப்டன் விஜயகாந்த் பாராட்டி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை வெளுத்து வாங்குகிறது.
இதனால் சென்னை தியாகராய நகர், வியாசர்பாடி, கொளத்தூர், பெரம்பூர், சுரங்க பாதைகள், சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தேங்கிய தண்ணீரை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியதற்கு இணங்கி, மழை நீரை அகற்றுவதற்காக துரித நடவடிக்கை மேற்கொண்டு ராட்சச இயந்திரங்களைக் கொண்டு மழை நீரை அகற்றிய மு.க ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழக அரசுக்கும் என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எதிர்க்கட்சிகள் கூறிய உடனே தமிழக அரசானது உடனடி நடவடிக்கையை மேற்கொண்டு மக்கள் பாதிப்படையாதவாறு மழை நீரை அகற்றியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியை சகஜ நிலைக்கு திரும்பிக் கொண்டு வந்த தமிழக அரசுக்கும் மாநகராட்சிக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். (3-3) pic.twitter.com/D64BAitMr8
— Premallatha Vijayakant (@imPremallatha) November 3, 2022