காட்டு யானை தாக்கியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தை சேர்ந்த தொண்டாமுத்தூர், மாங்கரை, பெரியநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் சோளப்பயிர் தற்போது அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது. இதனால் காட்டுயானைகள் வனப்பகுதியில் இருந்து நாளுக்கு நாள் அதிக அளவில் வெளியேறி ஊருக்குள் புகுந்து வந்தது. யானைகள் ஊருக்குள் புகாமல் இருப்பதற்காக வனத்துறையினர் ஆல்பா, பீட்டா ,காமா என மூன்று சிறப்புப் படைகள் அமைத்து யானைகளை கண்காணித்து வருகின்றனர்.
எனினும் உணவிற்காக யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து விடுகிறது. இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் பன்னிமடை அடுத்த ஸ்ரீநகர் பகுதியில் காட்டு யானை கூட்டம் ஒன்று புகுந்துள்ளது. அப்போது அந்த யானைகள் அவ்வழியாக மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த முதியவரை துரத்தி தாக்கியுள்ளது . இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் .
இதனை கண்டவர்கள் வனத்துறையினருக்கு உடனடியாக தகவலை தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோயம்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் உயிரிழந்த முதியவர் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.