ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் உலகம் முழுவதிலும் ஐந்தரை கோடி தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது
கொரோனா தொற்றை தடுப்பதற்காக நடவடிக்கை எடுக்கும் விதமாக பல நாடுகளில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு போட்டதிலிருந்து ஐநாவின் ஒரு அங்கமான சர்வதேச தொழிலாளர் அமைப்பு கொரோனாவின் தாக்கம் வேலைவாய்ப்புகளில் எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை தொடர்ந்து கண்காணித்து புள்ளி விவரங்களையும், அறிக்கைகளையும் சமர்ப்பித்து வருகின்றது.
அதன்படி சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “உலக அளவில் சுமார் ஐந்தரை கோடி கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வேலை இழக்கும் அபாயம் உருவாகியுள்ளது. அதில் மூன்று கோடிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். தொழிலாளர்களின் வருமானத்திற்கு உலக அளவில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் மேற்கொண்ட ஆய்வின்படி ஆசியா நாடுகளில் தான் 80% அதிகமானோர் வேலை இழப்பதற்கு வாய்ப்பு இருக்கின்றது.
அடுத்தபடியாக 74% அமெரிக்காவிலும் 72% ஆப்பிரிக்காவிலும் 45% ஐரோப்பாவிலும் வேலை இழப்பை சந்திப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதிலும் வீட்டு வேலை செய்துவரும் தொழிலாளர்கள் கொரோனா தொற்றால் பெரும் சிக்கலை சந்தித்துள்ளனர். கொரோனா அச்சத்தினால் முதலாளியுடன் தங்கியிருந்த பல தொழிலாளர்கள் வேலை இழந்து தற்போது வீதிக்கு வந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.