சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் விரிவாக்கம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மக்களின் பயணங்களை எளிதாக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவைகள் தற்போது சென்னையில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. அதோடு புறநகர் பேருந்து நிலையங்களும் கட்டப்படுகிறது. அதாவது பிராட்வேயில் இருந்த பேருந்து நிலையம், கோயம்பேட்டிற்கு மாற்றப்பட்ட நிலையில் இட நெருக்கடி அதிகரித்ததால் மாதவரத்தில் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இருப்பினும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கோயம்பேட்டில் கூட்ட நெரிசல் அதிக அளவில் காணப்படுகிறது.
இதன் காரணமாக கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் கோயம்பேட்டில் கூட்ட நெர்சல் தவிர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பணிகள் ஓரிரு மாதங்களில் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சிஎம்டிஏ புதிதாக 2 இடங்களில் பேருந்து நிலையங்களை கட்டுவதற்கு இடத்தை தேர்வு செய்துள்ளதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி புதிதாக பேருந்து நிலையம் அமைப்பதற்கு 22 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு வர்த்தக கட்டிடங்கள், பணிமனை மற்றும் எரிபொருள் நிரப்பும் இடங்கள் உட்பட அனைத்தையும் கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளனர். இதற்கான டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில், தகுதியான தனியார் நிறுவனங்களுக்கு பொறுப்பு ஒப்படைக்கப்படும். அதோடு பேருந்து நிலையங்களை 5 மாதங்களுக்குள் கட்டி முடிப்பதற்கும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி அருகே உள்ள ஒரு இடத்திலும், மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் இடத்தை கணக்கிட்டு ஒரு பேருந்து நிலையத்தையும் கட்டுவதற்கு முடிவு செய்துள்ளனர். இந்த 2 பேருந்து நிலையங்களால் பொதுமக்களின் போக்குவரத்து சுலபமாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.