மேற்கு வங்கத்தில் செவிலியர் ஒருவர் பாடிபில்டிங்கில் அசத்தி வருகிறார். இவர் பெயர் லிபிகா தேப்நாத் (25). இவர் திரிபுராவிலுள்ள சலிமா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். லிபிகா தேப்நாத் மேற்கு வங்கத்தில் செவிலியராக சேவை செய்கிறார். உடலை கட்டுமஸ்தாக வைத்து இருக்கும் லிபிகா, மேற்கு வங்கத்தின் மால்டாவிலுள்ள சன்சஹல் பல்நோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.
இது தொடர்பாக லிபிகா தேப்நாத் அளித்த பேட்டியில், “மருத்துவமனையில் நான் முழுமையாக செவிலியர் பணியில் கவனம் செலுத்துவேன். இதையடுத்து அந்தப் பணி முடிந்த பின் தவறாமல் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வேன். எனது பெற்றோருக்கு நான் ஒரே பிள்ளை. என் தந்தை ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார்.
அவர்தான் என் கையைப்பிடித்து ஜிம்முக்கு (உடற்பயிற்சி கூடம்) அழைத்துச் சென்றார். அதனை தொடர்ந்து கொரோனா பெருந்தொற்று காலத்தில் எனக்கு மால்டாவிலுள்ள அரசு மருத்துவமனையில் செவிலியர் பணி கிடைத்தது. பின் சென்ற மாதம் சர்வதேச பாடிபில்டிங் போட்டியில் கலந்து கொண்டேன். என் ஒரே இலக்கு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதே ஆகும்” என்று கூறினார்.