உலக மக்கள் ஜூன் 21ம் தேதியில் யோகா தினமாக கொண்டாடி வருகின்றனர். பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே இந்த யோகா கலை நம் தமிழ்நாட்டில் தோன்றிய கலை என்பது நமக்கெல்லாம் பெருமைக்குரிய ஒன்று. நம்முடைய உடலை பல கோணங்களில் வளைத்து யோகா செய்வதால் நம்முடைய உடலானது நல்ல அழகான வடிவத்தைப் பெறுகிறது. உடலின் பல பகுதிகளில் இருக்கும் கொழுப்பு, ஊளைச் சதை எனப்படும் தேவையற்ற சதைகள் குறைந்து உடல் அழகான வடிவம் பெறுகிறது. தினமும் காலையில் யோகாசனங்கள் செய்வதால் நம்முடைய சிந்திக்கும் ஆற்றல் மேம்படுவது மட்டுமின்றி நம்முடைய மனம் பதற்றங்கள் நீங்கி அமைதி அடைகிறது.
யோகா செய்வதால் நம்முடைய மன அழுத்தம் மற்றும் மனம் சம்பந்தமான அத்தனை குறைபாடுகளும் நீங்குகிறது. யோகா செய்யும்போது நாம் உடலை வளைத்து நெளித்து செயல்படுவதால் உடலுக்கு அதிகப்படியான இயக்கம் கொடுக்கின்றோம். இதனால் நம்முடைய ரத்த ஓட்டம் சீரடைகிறது. இப்படி இரத்த ஓட்டம் சீரடைந்து உடலில் வாயு கோளாறுகள் ஏற்படுவது தடுக்கப்பட்டு, இரத்தத்தில் தேங்கியிருக்கும் நச்சுக்களை ஆகியவை சிறிது சிறிதாக நீங்குகிறது. இன்றைய காலகட்டத்தில் கடைகளில் விற்கும் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதாலும், கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிடுவதாலும், பலருக்கும் வயிற்றில் தொந்தி அல்லது தொப்பை ஏற்படுகிறது.
அதோடு ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள், உடலுக்கு சற்று அழுத்தம் தரும் வகையிலான பணிகளில் ஈடுபடுபவர்கள் யோகாசனங்கள் செய்வது நல்லது. இதனால் உடலில் ஏற்படும் வலிகளைப் போக்கும் சிறந்த வலி நிவாரணியாக யோகாசன கலை செயல்படுகிறது. நம்முடைய உடலில் எந்த வியாதியும் இல்லாமல் இருந்தாலே நமக்குள் பல மடங்கு ஆரோக்கியம் உண்டாகும். நோய் நொடியின்றி வாழ ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றுவதோடு, தினம்தோறும் யோகாசனங்கள் செய்து வருவதால் உடலும் மனதும் நல்ல ஆரோக்கியம் பெறும்.