தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது வருடம் தோறும் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். அந்த வகையில் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், அவனியாபுரம், அலங்காநல்லூர் மற்றும் வாடிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு அனுமதி கேட்டு விழா கமிட்டியினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகரை சந்தித்து மனு கொடுத்துள்ளனர். அதோடு மதுரை மாவட்ட ஆட்சியரை ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள வருமாறும் அழைப்பு விடுத்துள்ளனர். அதன் பிறகு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டியினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர்கள் பேசியதாவது, ஜனவரி 17-ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில், அரசின் அனுமதியை பெறுவதற்காக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்துள்ளோம். இந்த போட்டியை அரசின் அனுமதிகளுக்கு உட்பட்டு நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு ஆன்லைன் மூலமாக டோக்கன் வழங்குவது குறித்து அரசு முடிவு எடுக்கும். மேலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் கண்டு கழிப்பதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.