திருப்பூர் அருகே வங்கியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூபாய் 25 லட்சம் மோசடி செய்ததாக விவசாயி ஒருவர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
திருப்பூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ரத்தினசாமி என்பவர் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் என் பெயர் ரத்தினசாமி. நான் விவசாய தொழில் செய்து வருகிறேன். திருப்பூரில் இருப்பதால் பனியன் தொழிலும் எனக்கு நன்கு தெரியும். விவசாயம் ஒருபுறம் பார்க்க மறுபுறம் பனியன் கம்பெனியில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறேன்.
அங்கு பணி புரியும் போது திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் பல்லடம் அருகே உள்ள ஒரு வங்கியில் தனக்கு வங்கி வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 25 லட்சம் பணம் கேட்டுள்ளார். இதனை உண்மை என நம்பி நானும் எனது குடும்பத்தினரும் ஆங்காங்கே உறவினர்களிடமும் நண்பர்களிடமும் கடனாக பணம் பெற்று ரூ25 லட்சத்தை அவரது உறவினரான பிரேம்குமார் என்பவரிடம் 2018ம் ஆண்டு அளித்தோம்.
ஆனால் தற்போது வரை வங்கியில் வேலையும் வாங்கித் தராமல் பணத்தையும் தராமல் செல்போன் எண்ணையும் துண்டித்துக் கொண்டால், இருவரும் தலைமறைவாகிவிட்டனர். ஆகையால் எனது பணத்தை அதிகாரிகள் மீட்டு தரவேண்டும் என்று அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.