பெண் போலீசை மிரட்டிய அமைச்சர் மகன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
குஜராத் மாநிலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் குமார் கனானி. கொரோனா தொற்றின் காரணமாக குஜராத் மாநிலத்தில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது . சூரத்தின் மங்கத் சவுக் பகுதியில் இரவு நேர பாதுகாப்பு பணியில் பெண் போலீஸ் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அப்போது முக கவசம் இல்லாமல் காரில் வந்த நபர்களை நிறுத்தி விசாரித்தார். அவர்கள் தங்கள் நண்பனான மாநிலசுகாதாரத்துறை அமைச்சரின் மகன் பிரகாஷ் கனானியை அழைத்தனர். இதற்கிடையில் பெண் காவலர் ,கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்தில், முக கவசம் இல்லாமல் காரில் சுற்றித் திரிந்த ஐந்து நபர்களை தடுத்து நிறுத்தி விசாரித்த போது, அவர்கள் அமைச்சர் கனானியின் மகனான பிரகாஷை போன் செய்து அழைத்ததாக தனது உயர் அதிகாரிக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பின் அந்த இடத்திற்கு வந்த பிரகாஷ் கனானி தனது நண்பர்களை விடுவிக்க கூறி பெண் போலீசிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார். பின்பு ஒரு கட்டத்தில் எல்லை மீறி உங்களை ஒரு வருடம் நிற்க வைக்க முடியும் என மிரட்டி பேசியுள்ளார். அதற்கு அந்த பெண் காவலர் உங்களின் அடிமையோ அல்லது பிதாக்களின் வேலைக்கார்களோ நாங்கள் இல்லை என பதிலடி கொடுத்து உள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி உள்ளது. சம்பவம் நடந்து ஒருநாள் கழித்த பின்னரே அமைச்சரின் மகன் மற்றும் அவரின் நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி அசிஸ்டன்ட் கமிஷனர் சவுத்ரி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, அந்த பெண் காவலர் தற்போது விடுமுறையில் சென்றுள்ளதாகவும் தெரிவித்தார். அமைச்சர் குமார் கனானி சம்பவம் பற்றி கூறுகையில் தனது மகன் பிரகாஷ் அவரின் மாமனாரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அந்த பெண் காவலர் நிறுத்தி உள்ளார். ஆனால் இருதரப்பினரும் ஓருவருக்கொருவர் நன்றாக புரிந்து கொண்டு விட்டுக்கொடுத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.