Categories
தேசிய செய்திகள்

சென்னையில் ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றும் பணி தொடங்கியது!

சென்னையில் ஏசி அல்லாத படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சைக்கான தனிமை வார்டுகளாக மாற்றும் பணிகளை தொடங்கியதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 898ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 162 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற எதற்கும் வெளியே வரவேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே வருகிற ஏப்ரல் 14ம் தேதி வரை கொரோனா பரவலை தடுப்பதற்காக அனைத்து பயணிகள் ரயிலையும் ரத்து செய்துள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரயில்வே பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்றித் தர இந்திய ரயில்வே முன்வந்துள்ளது.

அதன்படி சென்னையில் ஏசி அல்லாத படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் மாற்றங்களை கொண்டு வர ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. ரயிலில் உள்ள கழிவறையை குளியலறையாக மாற்ற உள்ளனர். கை கழுவுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டு அங்கு வாளி, குவளை, சோப் உள்ளிட்டவை வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ சாதனங்களை வைப்பதற்கான இடம் ஒவ்வொரு கேபினிலும் உருவாக்கப்படும் என்றும், மொபைல், லேப்டாப் சார்ஜ் செய்யும் வசதி தொடர்ந்து இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 230 வோல்ட் பிளக் பாயின்ட் ஒவ்வொரு கேபினிலும் பொருத்தவும், நோயாளிகளை தனிமைப்படுத்த இரண்டு படுக்கைகளுக்கு நடுவே பிளாஸ்டிக் திரைச்சீலை அமைக்கவும் ரயில்வேதுறை முடிவு செய்துள்ளது.

Categories

Tech |