தென்னாப்பிரிக்காவில் 10 குழந்தைகள் பெற்றதாக கூறப்பட்ட பெண் மனநல சிகிச்சையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
பொதுவாக கருவுற்ற தாய்மார்களுக்கு அதிகபட்சமாக மூன்று குழந்தைகள் பிறப்பது தான் இயற்கை. ஆனால் அதையும் தாண்டி 4 குழந்தைகளுக்கு மேலாக பெற்றெடுப்பது இயற்கைக்கு மாறானது. கருவுறுதல் சிகிச்சை காரணமாக இவ்வாறு நடக்கிறது. அதற்கு அதிக பணம் செலவாகும்.
மேலும் வெற்றி வாய்ப்புகளும் குறைவு. நான்கிற்கு மேல் ஒரே சமயத்தில் பெறப்படும் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் ஏற்படும். இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் சிதோலே என்ற பெண் 10 குழந்தைகளை ஒரே சமயத்தில் பெற்றெடுத்தார் என்ற செய்தி கடந்த வாரத்தில் வெளியாகியிருந்தது.
அந்த பெண்ணின் கணவர் சோடெட்சி, மூன்று பெண் குழந்தைகளும் 7 ஆண் குழந்தைகளும் தன் காதலிக்கு பிறந்திருப்பதாக பத்திரிகைகளிடம் தெரிவித்தார். தான் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாக தெரிவித்திருந்தார். இச்செய்தி உலக நாடுகள் முழுவதும் வேகமாக பரவியது. உலக சாதனை என்றும் கூறப்பட்டது.
எனினும் 10 குழந்தைகள் பிறந்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்ட மருத்துவமனை, நாங்கள் அந்த பெண்ணுக்கு எந்த சிகிச்சையும் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும் பிரிட்டோரியா பகுதியில் அனைத்து மருத்துவமனைகளிலும் பிரசவம் நடைபெற்றதாக பதிவுகள் இல்லை.
தற்போது அந்த பெண்ணின் கணவர் பத்துக் குழந்தைகள் பிறந்திருப்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவித்திருந்தார். மேலும் அந்த குழந்தைகள் தற்போது வரை யாருக்கும் காட்டப்படவில்லை. குழந்தைகள் எங்கு இருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை. எனவே சிதோலே, உறவினர் ஒருவரின் வீட்டில் இருந்தபோது காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
மேலும் மனநல சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தென்னாபிரிக்காவின் தேசிய சுகாதார துறை மேற்கொண்ட விசாரணையில், அவருக்கு 10 குழந்தைகளைப் பிறக்கவில்லை என்று கூறியிருக்கிறது. இதற்கு எந்தவித ஆதாரங்களும் காட்டப்படவில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிதோலே மனநல சிகிச்சையை விரும்பவில்லை. அவர் நல்ல மனநிலையுடன் இருப்பதாக நினைக்கிறார் என்று அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.