வேலூர் பெண்கள் சிறையில் இருக்கும் தனது மனைவியை ஆண்கள் சிறையில் இருக்கும் முருகன் சந்தித்துப் பேச வேண்டும் என்று சிறை சூப்பிரண்டுவிடம் மனு அளித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான முருகன் ஆண்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் 15 நாட்களுக்கு ஒரு முறை நேரில் சந்தித்துப் பேசி வந்தனர். ஆனால் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இவர்கள் நேரடி சந்திப்பு நிறுத்தப்பட்டது.
ஆகையால் அவர்கள் செல்போனில் வீடியோ கால் பேச அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் முருகன் சிறையில் இருந்து தனது வெளிநாட்டில் இருக்கும் உறவினர் ஒருவருக்கு செல்போன் மூலம் பேச முயற்சித்துள்ளார். இதனை சிறைக் காவலர்கள் தடுத்து நிறுத்தினர். அதன்பின் நளினியுடன் செல்போனில் பேச தடை விதிக்கப்பட்டதுடன் அவருக்கு சிறையில் வழங்கப்பட்ட சலுகைகளும் ரத்து செய்யப்பட்டது.
இதனால், முருகன் சிறை சூப்பிரண்டு ருக்மணி பிரியதர்ஷனிடம் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர், தனக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, தன் மனைவியைநேரில் சந்தித்து பேச அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உரிய பரிசீனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.