சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் பல்வேறு தீவிரவாத செயல்களுக்கு துணை போனதால் தான் மத்திய அரசு தடை விதித்துள்ளது. தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக பேசுவது சட்டப்படி குற்றம். கடந்த 1991-ம் ஆண்டு அரசு தகவல்களை விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு கசிய விட்டதால்தான் திமுக இயக்கம் கலைக்கப்பட்டது. பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு ஆதரவாக பேசும் சீமானும், திருமாவளவனும் தேசத் துரோகிகள். ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பது என்பது நீதிமன்றத்தின் உத்தரவை அவமதிப்பது போன்றதாகும்.
தமிழ்நாட்டு டிஜிபி சைலேந்திரபாபு அரசிடம் சம்பளம் வாங்குகிறாரா? இல்லையென்றால் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பிடம் சம்பளம் வாங்குகிறாரா? பிரதமர் மோடியும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் இல்லையென்றால் இந்தியா கொரோனாவால் செத்திருக்கும் என்பதை டிஜிபி உணர வேண்டும். தேசத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் முதலில் சீமானையும், திருமாவளவனையும் கைது செய்ய வேண்டும். மத்திய உளவுத்துறை அறிக்கையில் தமிழக அரசை பற்றி கூறப்பட்டுள்ளது. எனவே அரசை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் உடனடியாக அவர்கள் 2 பேரையும் கைது செய்யுங்கள் என்றார். மேலும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை பற்றி அவதூறாக பேசிய குற்றத்திற்காக காரைக்குடி காவல் நிலையத்தில் எச். ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.