ஊரடங்கு குறித்த அடுத்தகட்ட அறிவிப்பை மத்திய, மாநில அரசுகள் சிறிதும் தாமதிக்காமல் அறிவிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கு நீடிக்கப்படுமா?, நீக்கப்படுமா?, படிப்படியாக தளர்த்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பும், குழப்பமும் மக்கள் மனதில் நிலவுகிறது. மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு ஒத்துழைக்க வேண்டியது பொதுமக்களின் தலையாய கடமையாகும் என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
35 நாட்களுக்கு மேலாக வீட்டிலேயே முடங்கியுள்ள மக்களின் மனநிலை, வளவதாரத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். எனவே ஊரடங்கு குறித்து கடைசி நேரத்தில் அறிவித்து பதற்றத்தை அதிகரிக்காமல், முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 37வது நாளாக அமலில் உள்ளது.
ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. மே 3ம் தேதியோடு 2ம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கடந்த 27ம் தேதி நடைபெற்ற மாநில முதல்வர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிக்க கோரிக்கை வைக்கப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார்.
இந்த நிலையில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணமாகவே இருப்பதால் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நேற்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர், இன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த நிலையில், ஊரடங்கை முக்கூட்டியே அறிவிக்கும் படி அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.