வனப்பகுதியில் இறந்து கிடந்த காட்டு யானையின் உடலை வனத்துறையினர் பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனபகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வனத்துறையினர் உருகுழிபள்ளம் என்ற இடத்தில் அழுகிய நிலையில் பெண் யானை இறந்து கிடப்பதை பார்த்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தகவலின் படி வனத்துறையினர் மற்றும் கால்நடைத்துறை டாக்டர் குழுவினர் அங்கு விரைந்து சென்று இறந்து கிடந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, இறந்து கிடப்பது சுமார் 46 வயதுடைய பெண் யானை எனவும், இறந்து 4 நாட்களுக்கும் மேல் ஆகிறது எனவும் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து கடந்த சில நாட்களாக வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு வந்த அந்த யானை எதுவும் சாப்பிடாமல் இறந்து விட்டதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.