ஆடம்பர செலவு செய்வதற்காக ஒரு கோடி ரூபாய் கேட்ட மனைவி மீது கணவர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு பனாசாவடி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமித் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு இஷா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்த அமித்திடம், செலவுக்கு பணம் வேண்டும் என்று கேட்டு இஷா அடிக்கடி தொல்லை செய்ததோடு, தனக்கு தங்க நகைகள் வாங்கி தர வேண்டுமெனவும் கேட்டுள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு போது, அமித்திடம் ஒரு கோடி ரூபாய் வேண்டும் என்று கேட்டு இஷா மிரட்டியுள்ளார்.
மேலும் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்துவதாக போலீசில் புகார் அளித்து விடுவேன் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து தனது மனைவி இஷா மீது பானாசவடி காவல் நிலையத்தில் அமித் புகார் அளித்தார். அந்த புகாரில் தனது மனைவி ஆடம்பர செலவு செய்வதற்காக ஒரு கோடி ரூபாய் கேட்டு தகராறு செய்ததாகவும், அதனை கொடுக்கவில்லை என்றால் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக காவல்நிலையத்தில் புகார் கொடுப்பேன் என மிரட்டுவதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு தனது மனைவி ஏற்கனவே 2 திருமணம் ஆனதை மறைத்து தன்னை மூன்றாவதாக திருமணம் செய்து உள்ளார் எனவும் குற்றம் சாட்டியுள்ளார். எனவே இச்சம்பவம் தொடர்பாக இஷாவை பிடித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். பொதுவாக திருமணதிற்கு பின்பு கணவன் தன் மனைவியை வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தும் இந்த காலகட்டத்தில் மனைவி கணவனிடம் ஆடம்பர செலவு செய்வதற்காக பணம் கேட்டு மிரட்டி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.