கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் பூசாரி தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகலூர் பகுதியில் சென்னபசப்பா என்பவர் வசித்து வருகிறார். இவர் பகலூரில் இருக்கும் பைரவர் கோவிலில் பூசாரியாக இருக்கின்றார். இவருக்கு கௌரம்மா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மிருத்தியன் ஜெயா என்பவர் சென்னபசப்பாவிற்கு உதவியாக கோவில் பணியில் சேர்ந்து அவரது வீட்டில் தங்கியுள்ளார். அப்போது மிருத்தியனுக்கும், கௌரம்மாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி விட்டது.
இதனை அறிந்த சென்னபசப்பா 2 பேரையும் கண்டித்ததோடு மிருத்தியனை வீட்டிலிருந்து வெளியேற்றி விட்டார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் கோவிலுக்கு சென்றபோது மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதால் கோபமடைந்த சென்னபசப்பா அருகில் கிடந்த கட்டையை எடுத்து கௌரம்மாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் மயங்கி கீழே விழுந்த கௌரம்மாவின் கழுத்தை துப்பட்டாவால் நெரித்ததோடு, கழுத்தை கத்தியால் அறுத்து சென்னபசப்பா கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இதனை அடுத்து அவர் வேப்பனபள்ளி காவல் நிலையத்திற்கு சென்று தனது மனைவியை கொலை செய்த விவரத்தை கூறியுள்ளார். அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரின் உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் மனைவியை கொலை செய்ததாக காவல்துறையினரிடம் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.