கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக மனைவியை வீட்டிற்கு வரவழைத்து அவர் தலையில் கல்லை போட்டு கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மருதுபாண்டியர் நகரில் வெற்றி செல்வம் என்பவர் வசித்துவருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களுக்கு திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஆன நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சரண்யா வெற்றி செல்வத்தை விட்டுப் பிரிந்து மதுரை மாவட்டத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் சரண்யாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட வெற்றிசெல்வன் உன்னை பார்க்க வேண்டும் எனக்கூறி சரண்யாவை அழைத்துள்ளார். இதனை அடுத்து கணவன் கூறியதைக் கேட்டு சரண்யா பரமக்குடியில் உள்ள வீட்டிற்கு சென்று இருவரும் தனியாக இருந்தபோது மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வெற்றி செல்வம் மதுரையில் வசிக்கும் ஒருவருடன் உனக்கு தகாத உறவு இருக்கின்றது என சரண்யாவிடம் கூறியதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது கோபம் அடைந்த வெற்றி செல்வம் வீட்டிற்கு வெளியே கிடந்த பாறாங்கல்லை எடுத்து சரண்யாவின் தலையில் போட்டதால் சம்பவ இடத்திலேயே சரண்யா துடிதுடித்து உயிரிழந்தார். அதன்பின் பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் வெற்றி செல்வம் சரண் அடைந்துள்ளார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சரண்யாவின் சடலத்தை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.