தனது சாவுக்கு காரணமானவர்கள் குறித்து தெரிவித்து விட்டு விதவைப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள ராமாபுரம் பகுதியில் கண்ணபிரான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நீலாவதி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணபிரான் இறந்து விட்டதால் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் நீலாவதி தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நீலாவதி தனக்கு சொந்தமான நிலத்திற்கு செல்லும் போது அதே பகுதியில் வசிக்கும் வீரமணி, அவரது மனைவி ராஜேஸ்வரி மற்றும் சகோதரர் சச்சிதானந்தம் போன்றோர் நீலாவதியை ஆபாசமாக திட்டி தகராறு செய்துள்ளனர்.
இதனையடுத்து மீண்டும் நீலாவதி தனது தோட்டத்திற்கு சென்ற போது ஏன் எங்கள் நிலத்தை கடந்து செல்கிறாய் எனக் கூறி மீண்டும் மூன்று பேரும் அவரை ஆபாசமாக திட்டியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் தனது சாவுக்கு வீரமணி குடும்பத்தினர் தான் காரணம் என்று செல்போன் பதிவு மூலம் உறவினர்களுக்கு அனுப்பி விட்டு நீலாவதி விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீலாவதியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வீரமணி, ராஜேஸ்வரி, சச்சிதானந்தம் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.