தமிழகத்தில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு தமிழகமும் தப்பவில்லை. நாட்டிலேயே அதிக தொற்று கொண்ட மாநிலமாக தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அதே நேரத்தில் அதிகமான கொரோனா பரிசோதனை செய்து உயிரிழப்பை குறைத்த மாநிலம் என்ற பாராட்டை தமிழகம் பெற்றுள்ளது. தமிழகத்தின் இறப்பு வீதம் குறைவு என்று பல மட்டங்களில் பாராட்டப்பட்டது. நாட்டிலே அதிகமான பரிசோதனை மையங்கள் உள்ளது என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தால் புகழப்பட்டது தமிழகம், மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக இருக்கின்றது.
முன்னுதாரணம்:
தமிழகத்தை ஒரு முன்னுதாரணமாக பிற மாநிலங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் கொரோனா தடுப்பு காலகட்டத்தில் தமிழக அரசு மீது பல்வேறு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தன. சிறப்பான சிகிச்சை கொடுத்து அதிகமானோரை குணப்படுத்தியும் அரசு அசதியுள்ளது. இன்று வரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,18,594 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 71,116-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
மக்கள் குழப்பம்:
தமிழக அரசின் நடவடிக்கை பாராட்டக்கூடியதாக இருந்தாலும் தமிழக முதல்வர் கொரோனா பரவல் சமூக தொற்றாக மாறவில்லை என்று தொடர்ந்து கூறி வருவது தமிழக மக்களை குழப்பம் அடைய வைத்துள்ளது. நேற்று கூட கிண்டியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஒரு விடாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் தான் அது சமூக பரவல்…. தமிழகத்தில் கொரோனா சமூக தொற்றாக மாறவில்லை என்று தெரிவித்தார். இதுவரை 1.18 லட்சம் பேர் பாதிக்கப்பட்டும் கூட முதல்வர் சமூக பரவல் இல்லை என்று கூறுவது தமிழக மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
சமூக தொற்று:
அண்டை மாநிலமான கொரோனா பாதிப்பில் நாட்டிலே 7ஆவது இடத்தில் இருக்கும் கர்நாடகாவில் 26,815 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல 5,895 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு நாட்டிலேயே அதிக பாதிப்பு கொண்ட மாநிலமாக உள்ள கேரளாவில் கொரோனா பரவல் சமூக தொற்றாக மாறிவிட்டது என இரு மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களும் தெரிவித்து வரும் நிலையில் தமிழக அரசு மட்டும் இன்னும் கொரோனா பரவல் சமூக தொற்றாக மாறவில்லை என்று சொல்லி வருகின்றது.
அரசு மறுக்க காரணம் என்ன ?
தமிழகத்தில் கொரோனா பரவல் தொடங்கிய காலம் முதல் ஆளும் அரசு மீது எதிர்கட்சியான திமுக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து. குறிப்பாக கொரோனா தடுப்பு பணி தொடங்கி அனைத்து மட்டத்திலும் அரசு தோல்வி அடைந்து விட்டது என்று அடுக்கடுக்கான விமர்சனங்களை பல கட்டத்தில் முன்வைத்து வந்தது. இந்த நிலையில்தான் தமிழக அரசு சார்பாக கொரோனா சமூக பரவலாக மாறிவிட்டது என்று கூறினால், அது திமுகவிற்கு ஒரு சாதகமான சூழலாக மாறிவிடும் என்று தமிழக அரசு கருதுகின்றது என அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர். நேற்று கூட முதல்வர் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.