நாமக்கல் மாவட்டத்தில் அருந்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள காவிரி கரட்டங்காடு பகுதியில் அருந்தமிழர் பேரவை நிர்வாகி ரவி(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வெளியில் உள்ள திண்ணையில் தூங்குவதாக சென்றுள்ளார். இதனையடுத்து நேற்று காலை அவரது குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்த போது தூங்கிக்கொண்டிருந்த ரவியின் உடலில் பல்வேறு வெட்டு காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்து காணப்பட்டுள்ளார். இதனைப்பார்த்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி, மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து ரவியின் உடலை மீட்டு உடற்கூராவிற்கு சேலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் மர்ம நபர்கள் சிலர் வெளியில் தூங்கிக்கொண்டிருந்த ரவியை அரிவாள் மற்றும் கத்தியுடன் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்த மர்மநபர்கள் யார் என்பது குறித்தும், கொலைக்கான காரணம் குறித்தும் தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரவி அருந்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் என்பதால் சம்பவ இடத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருவதால் அப்பகுதியில் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.