தனது காதலை ஏற்க மறுத்ததால் காதலியை கத்தியால் குத்தி கொலை செய்த சட்டக் கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பாலச்சந்திரன் என்பவரின் மகள் திரிஷ்யா, இவரின் பள்ளி காலத்து நண்பர் வினோத். வினோத் திரிஷ்யாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மேலும் அவர் எங்கு சென்றாலும் அவரை பின்தொடர்ந்து சென்று டார்ச்சர் செய்துள்ளார். இதுகுறித்து திரிஷ்யா தனது தந்தையிடம் தெரிவிக்கவே, கடந்த ஏப்ரல் மாதம் பாலச்சந்திரன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் ஆத்திரமடைந்த வினோத் கடந்த 16ஆம் தேதி பாலசந்தரின் கடைக்கு தீ வைத்ததாக சொல்லப்படுகின்றது. வினோத் நேற்று காலை திரிஷ்யாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது வீட்டின் கீழ்ப் பகுதி பூட்டப்பட்டிருந்தது. அவற்றை உடைத்து வீட்டிற்கு உள்ளே சென்று தேடிப் பார்த்தபோது கீழ் அறையில் யாரும் இல்லை. பின்னர் மேல் வீட்டிற்கு சென்றபோது அங்கு திரிஷ்யா அவரது சகோதரியும் இருந்துள்ளனர். திரிஷ்யாவை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, பின்னர் தடுக்க வந்த திரிஷாவின் சகோதரி தேவஸ்ரீயையும் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே திரிஷ்யா பரிதாபமாக உயிரிழக்க, தேவஸ்ரீ உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலை செய்து விட்டு தப்பித்து ஓடிய வினோதை ஆட்டோ டிரைவர் ஜவஹர் என்பவர் பிடித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.