வூஹானிலிருந்து குரானா தோன்றியதற்கான ஆதாரத்தை அமெரிக்கா கொடுத்தால் வாங்கிக்கொள்ள தயாராக இருக்கிறோம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது
சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் ஏராளமான தாக்கத்தை ஏற்படுத்தி 2 லட்சத்திற்கும் அதிகமான உயிர் பலியை எடுத்த கொரோனா தொற்று சீனாவின் வூஹான் நகரில் இருக்கும் வைராலஜி இன்ஸ்டியூட்டில் இருந்துதான் தோன்றியது என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. அதோடு உலக சுகாதார நிறுவனம் சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் தொற்று குறித்து சரியான தகவலை ஆரம்பத்திலேயே கூறவில்லை எனவும் அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றம் சுமத்தி வந்தார்.
சீனா கொரோனா தொற்று விவகாரத்தில் உண்மையை மறைத்ததாகவும் சரியான தகவல்களை வெளிப்படையாக உலக நாடுகளிடம் பகிர்ந்து கொள்ளவில்லை எனவும் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ குற்றம் சுமத்தி வந்தார். ஏ.பி.சி. டெலிவிஷனின் ‘தி வீக்’ நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் பேசிய பாம்பியோ வூஹான் ஆய்வுகூடத்தில் கொரோனா தோன்றியதற்கான ஆதாரங்கள் இருக்கிறது என குறிப்பிட்டார்.
இந்நிலையில் ஜெனிவா நகரில் உலக சுகாதார நிறுவனத்தின் நெருக்கடி கால தலைவர் மைக்கேல் ராயன் கூறியிருப்பதாவது “வூஹான் நகரிலிருந்து கொரோனா தோன்றியது எனக் கூறப்படுவது எங்களை பொறுத்தவரை யூகத்தின் அடிப்படையில் அப்படியே நீடித்து வருகின்றது. கொரோனா தோற்றம் குறித்து அமெரிக்கா இதுவரை எந்த ஆதாரத்தையும் எங்களிடம் கொடுக்கவில்லை. ஆதாரம் கொடுப்பதாக இருந்தால் அதனை ஏற்றுக்கொள்ள நாங்கள் ஆவலுடன் இருக்கின்றோம்.
கொரோனா தொற்று இயற்கையாக உருவானது என்பதற்கு போதிய ஆதாரங்களும் ஆலோசனைகளும் தான் எங்களுக்கு இதுவரை வந்துள்ளது. டிரம்ப் மற்றும் வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ கூறியது போன்று வூஹான் ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் கொரோனா வந்திருக்கிறது என்று கூறுவதற்கான ஆதாரங்கள் இருந்தால் அதனை எப்பொழுது பகிர்ந்து கொள்வது அல்லது பகிர்ந்து கொள்ள வேண்டுமா என்பது குறித்து அமெரிக்க அரசு தான் முடிவெடுக்க வேண்டும்.
அதே நேரம் ஆதாரம் எதுவுமின்றி முடிவுக்கு வருவது என்பது உலக சுகாதார நிறுவனத்திற்கு கடினமான விஷயமாகும். நாங்கள் சீன விஞ்ஞானிகளிடம் இருந்து தகவல்களை தெரிந்துகொள்ள முடியும். ஒன்றாக இணைந்து பதில்களை பெற முடியும் ஆனால் தீவிரமான விசாரணைக்கு உரியது என நிறுத்தப்பட்டால் இதனை கையாளுவது மிகவும் கடினமானதாகும் அறிவியல் விவகாரமாக இருந்தால் பதில் காண முடியும் ஆனால் இது அரசியல் விவகாரம் கிடைக்கப்பெறும் பதில்களின் தாக்கங்களை ஒரு கொள்கை மற்றும் அரசியல் கண்ணோட்டத்திலேயே கையாள முடியும்” என கூறியுள்ளார்.