மாநில நிதி மற்றும் நிதி ஆதாரங்கள் குறித்து அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிதிகள் பற்றிய விபரங்களும் வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட வேண்டும் என ஸ்டாலின் கேட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ” கொரோனவை கட்டுப்படுத்துவதில் அலட்சியமும், மதுக்கடைகளை திறப்பதில் ஆர்வமும் கொண்ட அதிமுக அரசை கண்டித்து கருப்பு சின்னம் அணியும் போராட்டத்தை திமுக தலைமையிலான கூட்டணிக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இது அரசியல் போராட்டம் அல்ல. மக்களை காக்கும் சமூக பிரச்சனைக்கான போராட்டம் என்பதால் அனைத்துக் கட்சியினர் மட்டுமல்ல;
தமிழக மக்களும்பெரும் எண்ணிக்கையிலான மகளிரும், கருப்பு சின்னம் அணிந்து தங்களது எதிர்ப்பை அதிமுக அரசுக்கு தெரிவித்துள்ளார்கள். கொரோனாவை ஒழிப்பதில் தோல்வியடைந்துவிட்ட அதிமுக அரசை கண்டிக்கிறோம் என்று தமிழக அம்மக்கள் எழுப்பிய முழக்கங்களின் பேரொலி கோட்டையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் முதலமைச்சரின் காதுகளில் நிச்சயம் எதிரொலித்து பதற்றத்தை அதிகப்படுத்தியிருக்கும். தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,829 ஆக அதிகரித்துள்ளது.
இந்த எண்ணிக்கை அச்சத்தை ஊட்டுவதாகவே அமைத்துள்ளது. இருந்தாலும் இந்த பேரிடரில் இருந்து நாம் மீள முடியும் என்ற நம்பிக்கை நெஞ்சத்தில் நிறைந்திருக்கிறது. ஊரடங்கு அறிவித்துவிட்டோம் அதனால் கொரோனா ஒழிந்துவிடும் என்பது மிகமிக பிழையான எண்ணம். கொரோனா தானாக ஒழியாது. அரசு தான் ஒழிக்க வேண்டும் என்றும், கொரோனா தானாக பரவாது. அது பரவாமல் அரசு தான் தடுக்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.