திமுக – காங்கிரஸ் கட்சிக்கு ஊழல் பற்றி பேச என்ன தகுதி இருக்கின்றது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில் அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பின்பு பேசிய அமித் ஷா, திமுகவையும் – காங்கிரஸையும் கடுமையாகச் சாடினார். அப்போது பேசிய அவர், மிகுந்த காலத்துக்கு பிறகு நான் சென்னை வந்து இருக்கின்றேன். ஆகையால் நான் அரசியலும் பேசு விரும்புகின்றேன். தமிழ்நாட்டிற்கு நான் வந்திருக்கும் இந்த வேளையிலே ஒரு விஷயத்தை நினைவு கூற விரும்புகின்றேன். நரேந்திரமோடி அவர்கள் அரசியல் களத்தில் வந்த பிறகு மூன்று வாதங்களுக்கு எதிராக அவர் போர்க்கொடி உயர்த்தினார். அதில் அவர் வெற்றியும் கண்டிருக்கிறார்.
ஓன்று ஊழல் வாதம், அடுத்ததாக பழமைவாதம் ( குடும்ப அரசியல்), அதற்கு அடுத்ததாக சாதி அரசியல். இதில் முதலாவதாக நான் பரம்பரை அரசியல் என்ற குடும்ப அரசியலை பற்றி பேச விரும்புகின்றேன். இங்கே குடும்ப அரசியல் நடத்தி வரும் சில கட்சிகள் , அவர்களைப் போன்ற குடும்ப அரசியலை நாடு முழுவதும் நடத்திக்கொண்டிருக்கும் தேசிய – மாநில கட்சிகளுக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டி கொண்டிருக்கிறார்கள். அதேபோல் தமிழ்நாட்டிலும் பாடம் புகட்டப்படும் என்பது என் உறுதியான நம்பிக்கை.
நண்பர்களே எனக்கு ஒரு விஷயம் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. காங்கிரஸ் – திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இவர்களுடைய கூட்டணி ஊழலுக்கு எதிராக பேசுகின்றார்கள். ஊழலுக்கு எதிராக பேசுவதற்கு இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது ? அதிகாரம் இருக்கிறது ? 2ஜி அலைக்கற்றை மட்டுமல்லாமல் ஏகப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள ஊழல்களை செய்தவர்கள். அவர்களுக்கு ஊழலுக்கு எதிராக பேச்சு பேச என்ன அருகதை இருக்கிறது? ஊழல் குற்றச்சாட்டை நீங்கள் வைப்பதற்கு முன்பாக தயவுசெய்து உங்கள் பின்னே, உங்கள் குடும்பத்தை சற்று திரும்பி பாருங்கள். அதற்குப் பிறகு ஊழல் எது ஊழல் என்பது உங்களுக்குப் புரியும் என அமித் ஷா தெரிவித்தார்.