அனுமதியை மீறி பாஜக வேல் யாத்திரை நடத்தினால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமென அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை தமிழக பாஜக நடத்த இருந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்ததை தொடர்ந்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டத்திற்கு கட்டுப்பட்டு அனைவரும் நடக்க வேண்டும் இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் நலனை காக்க வேண்டியது அரசின் கடமை.
பொருளாதார மேம்பாட்டுக்காகவே தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டுவிடக்கூடாது. பொது மக்களை காப்பாற்ற வேண்டியது அரசாங்கத்தின் கடமை, அரசாங்கத்தின் முக்கியமான பொறுப்பு. பொது மக்களின் உயிரை பாதுகாப்பது அரசாங்கத்தின் தலையாய கடமை. எனவே அந்த கடமையை உணர்ந்து தான் இந்த நேரத்தில் வேல் யாத்திரை தேவையில்லை என்பதை வலியுறுத்தி இருக்கிறோம்.
அதை அவர்கள் உணர்ந்து, பொது மக்கள் நலன் சார்ந்த விஷயம் என்பதால் அவர்கள் வேல் யாத்திரை என்கின்ற அந்த ஊர்வலத்தை கைவிடுவது தான் நல்லது. எல்லோருமே சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள், சட்டத்திற்கு கட்டுப்பட்டு தான் எல்லோருமே இருக்கின்றோம். இந்திய அரசியல் சட்டம் இருக்கிறது. ஐபிசி என்று இருக்கிறது, இது சட்டம் இல்லாத நாடு அல்ல. சட்டம் இருக்கின்ற நாட்டுல யாராக இருந்தாலும், எந்த ஒரு குடிமகனாக இருந்தாலும் இந்த சட்டத்துக்கு கட்டுப்பட்டு தான் இருக்க வேண்டும். சட்டத்திற்கு கட்டுப்பட்டு இருப்பதுதான் ஜனநாயக அழகு.
சட்டத்துக்கு அப்பாற்பட்டு செயல்பட்டால் சட்டம் அதன் கடமையைச் செய்கின்ற ஒரு நிலை வரும். பிஜேபிக்கு மட்டுமல்ல… யாராக இருந்தாலும் சரி, ஒட்டுமொத்தமாக சட்டத்தை மதிக்க வேண்டும். அது தான் ஒரு நல்ல கட்சி, அது தான் ஒரு தனி மனிதனுக்கு அழகு. பாஜகவின் வேல் யாத்திரை போன்ற ஊர்வலங்களால் கொரோனா அதிகமாக பரவும் எனவே அதனை அவர்கள் கைவிட வேண்டும். சட்டத்தை மீறினால் தமிழக அரசு நடவடிக்கைஎடுக்கும். என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.