விருதுநகர் மாவட்டத்தில் கிணற்றில் வாலிபர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் உள்ள பூசாரிநாயக்கன்பட்டியில் வெள்ளைச்சாமி(21) என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடைய ஆட்டுக்குட்டி காணாமல் போன நிலையில் வெள்ளைச்சாமி அவரது நண்பருடன் ரெங்கப்ப நாயக்கன்பட்டி பகுதியில் தேடியுள்ளார். அப்போது அங்கிருந்த கிணற்றில் வெள்ளைச்சாமி கால் தவறி கிணற்றில் விழுந்துள்ளார்.
இதனையடுத்து அவர் மேலே ஏறுவதற்கு முயற்சி செய்தும் பலனளிக்காததால் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் வெள்ளைசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.