கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, கோயம்புத்தூர் பகுதியில் காலகாலமாக இருந்த, கோவையை பற்றி புரிந்த போலீஸ் அதிகாரிகளை எல்லாம் டிரான்ஸ்பர் செய்துவிட்டு, பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் கைது செய்ய வேண்டும் என்று அதிகாரிகளை நியமனம் செய்துள்ளார்கள். நாங்கள் ஒருவரையும் விடமாட்டோம். அதிகாலை 5 மணிக்கு எல்லாம் போய் கோழியை பிடிப்பது போன்று பிடித்து வருகிறீர்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் பகலில் கைது செய்யுங்கள் பார்ப்போம்.
நானும் காவல் துறையில் இருந்து தான் வந்திருந்தேன். போலீஸ் நடுநிலையோடு செயல்பட வேண்டும். அரசியல் கட்சிகள் நிரந்தரமாக இருக்கும். ஆட்சியில் இருப்பவர்கள் நிரந்தரமாக இருக்க மாட்டார்கள். எனவே பாரதிய ஜனதா தொண்டர்கள் மீது கை வைத்த ஒரு போலீசை கூட நாங்கள் விடமாட்டோம். தற்போது சிறையில் இருப்பவர்களை வெளியில் எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.
அவர்கள் வெளியே வந்த பிறகு நானே ஒவ்வொரு போலீசுக்கும் எதிராக கம்பளைண்ட் செய்வேன். அனைத்து பாரதி ஜனதா கட்சி தொண்டர்கள் மீது கை வைத்த ஒரு போலீசாரையும் விட மாட்டேன். இனிமேலாவது அவர்கள் நடுநிலையோடு இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் சொல்வதற்கு ஏற்றார் போல் இல்லாமல், நடுநிலையாக அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று எச்சரிக்கையாக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.