2021ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக விஜயகாந்த் வருவார் என்று அக்கட்சி துணை செயலாளர் சுதீஷ் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பதினாறுகால் மண்டபம் பகுதியில் தேமுதிக சார்பில் மகளிர் தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த், பிரேமலதா, துணைச் செயலாளர் சுதீஷ் , விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் மற்றும் முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய சுதீஷ் தமிழ்நாட்டில் இந்து , கிறிஸ்து, முஸ்லிம் என மாமன் , மச்சான் என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நமக்குள் பிரிவினையை ஸ்டாலின் உருவாக்குகிறார் என்று விமர்சித்தார்.
பொய் சொல்வதில் மன்னர் ஸ்டாலின். நடந்து முடிந்த தேர்தலில் ஒவ்வொரு கிராமமாக சென்று நாங்கள் வெற்றி பெற்றால் வட்டியில்லா கடன் கொடுத்து விடுவோம் என்று சொன்னார். இதை நம்பி மக்கள் நம்பி ஓட்டு போட்டார்கள் . அவர் சொன்ன பொய்யால் தான் தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிரும் கடனாளியாக உள்ளார்கள் என்று சுதீஷ் குற்றம் சாட்டினார்.
வருகின்ற 2021 தேசிய முற்போக்கு திராவிட கழகம் எந்த கூட்டணி உள்ளதோ அதில் 190 தொகுதியை முடிவு செய்யும். அந்த அளவுக்கு நம் கட்சி பலமாக இருக்கிறது. நாம் கூட்டணி வைத்தால் தான் பல கட்சிகள் வெற்றி பெறும். நான் டெல்லி சென்ற போது பலர் என்னிடம் விஜயகாந்த் எப்படி இருக்கிறார் என்று கேட்டனர். 2021 கேப்டன் தான் கண்டிப்பாக முதலமைச்சராக வருவார், அவருக்கு வாழ்த்துக்கள் என்று சொன்னார்.
2021 தேர்தலில் தேமுதிக கூட்டணி வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக கேப்டன் அமர்வார். எம்எல்ஏவாக இருந்தாச்சு , தமிழகத்தின் எதிர்க்கட்சியாகவும் வந்தாச்சு. இன்னும் வராத ஒரே பதவி முதலமைச்சர் பதவி தான் . கேப்டன் முதலமைச்சராக உட்கார்ந்தால் கேப்டன் இருக்கும் வரை அவர்தான் முதலமைச்சர் என்று சுதீஷ் தெரிவித்தார்.