Categories
உலக செய்திகள்

அதிர்ச்சியா இருக்கு….! ”விசாரணை நடத்துங்க” இந்தியா சொல்லுறத கேட்கோம் ….!!

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரேபிட் டெஸ்ட் கருவிகள் குறித்த இந்தியாவின் விசாரணைக்கு தயார் என சீன நிறுவனங்கள் தெரிவித்துள்ளது

உலக நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடும் பொழுது கொரோனா பாதிப்பின் அளவு இந்தியாவில் குறைந்த அளவிலேயே உள்ளது. அதேநேரம் பரிசோதனை கருவிகளும் இந்தியாவில் குறைவாகவே உள்ளது. இதன் காரணமாக அதிகப்படியான மக்களுக்கு பரிசோதனை நடத்த மத்திய மாநில அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. முதல் கட்ட பரிசோதனைக்கு விரைவாக உதவும்  5 1/2 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் என அழைக்கப்படும் கருவிகளை இந்தியா  சீனாவிலிருந்து இறக்குமதி செய்தது.

2½ லட்சம் கருவிகளை லிவ்சான் டயாக்னஸ்டிக்ஸ் நிறுவனமும் 3 லட்சம் கருவிகளை குவாங்சோ வோண்ட்போ பயோடெக் நிறுவனமும்  இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்தது. ஆனால் இறக்குமதி செய்யப்பட்ட கருவிகள் துல்லியமாக செயல்படவில்லை எனவும் முழுவதுமே செயல்படவில்லை எனவும் புகார்கள் இந்தியாவில் எழுந்துள்ளன. இதனைத்தொடர்ந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்துவதை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டது. இந்நிலையில் இந்தியாவிற்கு கருவிகளை வினியோகம் செய்த சீன நிறுவனங்கள் ரேபிட் டெஸ்ட் கருவிகளின் தரம் குறித்த இந்திய விசாரணை அமைப்புகளுடன் ஒத்துழைப்பு கொடுக்க தயார் என அறிவித்துள்ளது.

இதுகுறித்து 3 லட்சம் கருவிகள் ஏற்றுமதி செய்த குவாங்சோ வோண்ட்போ பயோடெக் நிறுவனம் விடுத்த அறிக்கையில் “”70க்கும் அதிகமான நாடுகளுக்கு ரேபிட் டெஸ்ட் கருவிகளை நாங்கள் ஏற்றுமதி செய்துள்ளோம். பூனே தேசிய வைராலஜி இன்ஸ்டியூட் மூலம் எங்கள் கருவியை மதிப்பிட்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஏற்றுக்கொண்டது.வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணியில் எங்களது நிறுவனம் அனைத்து நாட்டு சுகாதார அதிகாரிகளுடனும் முழுமையாக ஒத்துழைக்கிறது. அதேபோன்று இந்தியாவுடனும் விசாரணைகளுக்கு ஒத்துழைக்க எங்கள் நிறுவனம் தயார். எங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளில் உணர்திறன் மற்றும் தனித் தன்மை குறித்து பல சரிபார்ப்புகளை இறக்குமதி செய்யும் நாடுகள் மேற்கொள்கின்றன” என கூறப்பட்டுள்ளது.

அதே போன்று 2 1/2 லட்சம் கருவிகளை ஏற்றுமதி செய்த மற்றொரு நிறுவனமான லிவ்சான் டயாக்னஸ்டிக்ஸ் நிறுவனம் விடுத்த அறிக்கையில், “எங்கள் கருவிகளில் பரிசோதனை முடிவுகள் துல்லியமாக இல்லை என இந்தியாவிலிருந்து வந்துள்ள புகார்கள் எங்களை அதிர்ச்சியடைய செய்கிறது. இதனால் நாங்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளோம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையுடன் நாங்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க தயார். எங்கள் கருவியைப் பொருத்தவரை 2 டிகிரி முதல் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் இடத்தில் அதனை வைக்க வேண்டும். அவை உறைந்துவிடக்கூடாது. கருவிகளை வைக்கும் இடத்தின் வெப்பநிலை அதிகமாக இருந்தால் பரிசோதனையின் துல்லியத்தை பாதிக்கும்” என கூறப்பட்டுள்ளது

Categories

Tech |