இந்தியா போன்ற 9 நாடுகளைவிட அதிக அளவு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்
உலக நாடுகளில் கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வரும் நாடான அமெரிக்காவில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவைப் போன்று ஒன்பது நாடுகளைவிட அதிக அளவிலான கொரோனா பரிசோதனை அமெரிக்காவில் நடைபெற்றுள்ளதாக நாட்டின் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசிய பொழுது, “அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு எதிரான போர் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் 4.18 மில்லியன் மக்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். இது இந்தியா, தென்கொரியா, பிரான்ஸ், ஜப்பான், இங்கிலாந்து, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஸ்வீடன் மற்றும் கனடா போன்ற நாடுகளை விட அதிகம் என தெரிவித்தார்.
மேலும் அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் அதிக அளவு பாதிக்கப்பட்ட பகுதியாக நியூயார்க் மாகாணம் இருந்து வருகிறது. இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் அங்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த சில தினங்களாக பாதிப்பின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் இது ஒரு நல்ல முன்னேற்றம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அமெரிக்கர்கள் மிகவும் கடினமான விஷயங்களை செய்து முடித்து எண்ணற்ற உயிர்களை காப்பாற்றியுள்ளனர். பெரும்பாலும் அனைத்து பகுதிகளும் கொரோனாவை தடுப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. ஆளுநர்கள் முழு ஒத்துழைப்புடன் பணியாற்றுகிறார்கள். நமது மீது விமர்சனங்களை சுமத்துபவர்களை ஒருபோதும் நம்மால் திருப்தி படுத்த இயலாது. நிச்சயம் நாம் தடுப்பு மருந்தை கண்டறிவோம் என கூறினார்.