Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

பிரதமர் மோடி கொடுத்த காலிப்பக்கத்தை நிதியமைச்சர் பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கிறோம் – ப. சிதம்பரம் ட்வீட்!

பிரதமர் கொடுத்த காலிப்பக்கத்தை நிதியமைச்சர் பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கிறோம் என ப. சிதம்பரம் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 74,281 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 4வது முறையாக ஊரடங்கை நீட்டிக்க உள்ளதாகவும், அதுகுறித்த அறிவிப்புகள் 18ம் தேதி வெளியாகும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

மேலும் பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும், சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை 4 மணிக்கு விரிவான தகவல்களை வெளியிட உள்ளார்.

இந்த நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ப. சிதம்பரம், பிரதமர் மோடி நேற்று நமக்கு தலைப்பையும் பிறகு காலிப்பக்கத்தையும் கொடுத்துள்ளார். இயல்பாக என்னுடைய எதிர்வினை வெற்றிடமாக உள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த வெற்றிடமாக உள்ள பக்கத்தை இன்று பூர்த்தி செய்வார் என்று எதிர்பாக்கிறோம். பொருளாதாரத்தினுள் கூடுதலாக இடப்படும் ஒவ்வொரு ரூபாயையும் கவனமுடன் நாம் எண்ணுவோம், யாருக்கு என்ன கிடைக்கிறது என்பதையும் நாங்கள் கவனமாக ஆராய்வோம் என கூறியுள்ளார்.

மேலும் முதலில் நாங்கள் கவனிப்பது என்னவெனில் ஏழை மக்களுக்கு, பசியில் வாடுவோருக்கு, சீரழிந்த புலம் பெயர் தொழிலாளர்களுக்கு என்ன கிடைக்கும் என்பதையே. தங்கள் சொந்த ஊர்களுக்கு பல கி.மீ தூரம் நடந்து வந்து சேர்ந்தவர்கள் என்ன எதிர்பார்க்க முடியும் என்பதையும் கவனித்து வருகிறோம். பொருளாதாரத்தில் கீழ்நிலையில் இருக்கும் 13 கோடி குடும்பங்களுக்கு உண்மையான பணம் என்ற அளவில் என்ன கிடைக்கிறது என்பதையும் கவனத்துடன் பார்ப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |