உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு விழா குறித்தான கேள்விக்கு பதில் அளித்த டி.கே.எஸ். இளங்கோவன், உதயநிதி ஸ்டாலின் கட்சி வெற்றிக்கு சுத்தி சுத்தி பிரச்சாரம் செய்தார். அவரை கட்சி ஏற்றுக் கொண்டது. இதில் என்ன வாரிசு அரசியல் இருக்கிறது ? அவர் திமுகவின் குடும்பம். பிஜேபி கட்சியில் வாரிசு இல்லையா ? நாத்திகம் நாங்கள் பேசவில்லை.
ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று எங்கள் கட்சியை உருவாக்கிய அறிஞர் அவர்கள் சொன்னார்கள். நாங்கள் இதுபோன்ற மக்கள் சமத்துவத்தை முன் நிறுத்தி அரசியல் செய்கிறோம். மனுதர்மத்தை எதிர்த்து, மக்கள் சமத்துவத்தை, தமிழர்களின் பண்பாடான பிறப்புக்கும் எல்லா உயிர்க்குமான என 2000 ஆண்டுகளுக்கு முன்பாக வள்ளுவர் சொன்ன தமிழரின் பண்பாட்டை நாங்கள் முன்னெடுத்துச் செல்கிறோம்.
உதயநிதி பதவியேற்பு விழா முடிசூட்டு விழா இல்லை. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்றத்தை முடிசூட்டு விழா என்று சொல்லுவாரா ?அவர் பதவி ஏற்கும் பொழுது முடிசூட்டு விழா என்று சொல்வாரா ? சங்கரமடம் என்பது ஒரு குறிப்பிட்ட இனத்தை சார்ந்தவர்கள் தான் தலைவராக வரமுடியும். குறிப்பிட்ட வகுப்பை சேர்ந்தவர் தான் வர முடியும். இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. இப்பொழுது இந்த சூழ்நிலைக்கு சங்கரமடத்தை வம்புக்கு இழுப்பதற்கு நான் தயாராகவில்லை. ஆனால் அந்த சிந்தனைக்கு எதிரான நங்கள், சமத்துவ சிந்தனையாளர்கள் என தெரிவித்தார்.
”நாத்திகம் நாங்கள் பேசவில்லை” என்ற டிகே.எஸ் இளங்கோவன் கூறிய சொற்றொடர் திராவிட இயக்க ஆதரவாளர்களால் விமர்சனம் செய்யப்படுகின்றது. பொதுவாக திராவிட இயக்கங்கள் கடவுள் மறுப்பை தொடர்ந்து வலியுறுத்துவது, மூடநம்பிக்கை என சொல்லி கடவுள் நம்பிக்கை இல்லாமல் நாத்திகம் பேசுவது தான் திராவிட கொள்கை. பெரியார் திராவிட இயக்கத்தில் அந்த பணியை தான் தொடர்ந்து செய்துவந்தார்.
ஆனால் அரசியல் கட்சியாக திமுக உருவெடுத்த பிறகு அடுத்தடுத்து தலைவர்கள் மாறிய நிலையில் தற்போது அதன் கொள்கையிலிருந்து விலகி நாங்கள் ஹிந்துக்கள், எங்கள் கட்சியில் 90% பேர் ஹிந்துக்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி வந்த நிலையில் தற்போது நாங்கள் நாத்திகம் பேசவில்லை என்று டி.கே.எஸ் இளங்கோவன் கூறியது திராவிட ஆதரவாளர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.