ஹிந்தி மொழிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பேசிய கவிஞ்சர் வைரமுத்து, ஒரு வரலாற்று நெருக்கடி தமிழுக்கு நேர்ந்திருக்கிறது. இது ஒன்றும் தமிழுக்கு புதிது இல்லை, இந்தி திணிக்கப்படுவதும், தமிழன் அதை எதிர்த்து கொண்டிருப்பதும் இது 85 ஆவது ஆண்டு. 85 ஆண்டுகளாக ஒரு மொழியை ஒரு அரசு திணிக்க பார்க்கிறது, அந்த திணிப்பை தமிழர்களும், தமிழ்நாட்டு அரசும் எதிர்க்க பார்க்கிறது.
இது சாதாரண நிகழ்வு அல்ல, இப்போது நிகழ்ந்து கொண்டிருப்பது. தமிழை வாளின் முலையில் அழிக்க பார்த்தார்கள், தமிழை அதிகாரத்தால் அழிக்க பார்த்தார்கள், தமிழை அந்நிய படையெடுப்பால் அழிக்க பார்த்தார்கள், தமிழை மதத்தால் அழிக்க பார்த்தார்கள், தமிழை சாஸ்திரத்தால் அழிக்க பார்த்தார்கள். இப்போது தமிழர்களே… தமிழை சட்டத்தால் அழிக்க பார்க்கிறார்கள்.
தமிழர்கள் ஒன்றும் ஏமாந்தவர்கள் அல்ல, தமிழர்கள் ஒன்றும் உணர்வு குன்றியவர்கள் அல்ல, இந்த மொழி, எளிய மொழி அல்ல. இந்த மொழி காற்றுக்குப் பறக்கின்ற மொழி அல்ல, இந்த மொழி காகிதம் அல்ல, இந்த மொழி எளிய மொழி அல்ல,
தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் – இவள்
என்று பிறந்தவள் என்றுண ராத
இயல்பின ளாம் எங்கள் தாய்.
என்று பாரதியால் போற்றப்பட்ட மொழி, எங்கள் மொழி.
இனிமைத் தமிழ் மொழி எமது-எமக் கின்பம் தரும்படி வாய்த்த நல் அமுது கனியைப் பிழிந்திட்ட சாறு -எங்கள் கதியில் உயர்ந்திட யாம் பெற்ற பேறு
என்று பாவேந்தரால் பாடப்பட்ட மொழி எங்கள் தமிழ் மொழி.
கதிர் வெடித்துப் பிழம்பு விழ
கடல் குதித்துச் சூடாற்ற
முதுமை மிகு நிலப் பிறப்பின்
முதற் பிறப்புத் தோன்றி விட
நதி வருமுன் மணல் தரு முன்
நலம் வளர்த்த தமிழணங்கே
பதி மதுரைப் பெருவெளியில்
பாண்டியர் கை பார்த்தவளே!
நின்னை யான் வணங்குவதும்
நீ என்னை வாழ்த்துவதும்
அன்னை மகற்கிடையே
அழகில்லை என்பதனால்
உன்னை வளர்த்து வரும்
ஓண் புகழ் சேர் தண் புலவர்
தன்னை வணங்குகின்றேன்
தமிழ்ப் புலவர் வாழியரோ!
என்று கவியரசர் கண்ணதாசன் கொண்டாடப்பட்ட மொழி இந்த மொழி. இந்த மொழியை சாஸ்திரத்தை அழிக்க முடியாது, சட்டத்தாலும் அழிக்க முடியாது என பேசினார்.