குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக காவிரி குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். இதனையடுத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டாலும், போதுமான அளவு விநியோகம் செய்யப்படவில்லை. இவ்வாறு கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே குடிநீர் பிரச்சனை அதிகரித்ததால் மக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் மணப்பாறை விராலிமலை சாலையில் காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது முறையாக குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்ததையடுத்து, போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.