சட்டத்தை மீறி வனவிலங்குகளுக்கு உணவு அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டெருமைகள், மான்கள், காட்டு யானைகள் போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் பசுந்தீவனங்களை உண்ணும் வனவிலங்குகள் உணவு கிடைக்காமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக காட்டெருமைகள் மற்றும் காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்துள்ளனர்.
இந்நிலையில் மான்கள் மட்டும் முதுமலை சாலையோரம் உள்ள காய்ந்த புற்களை மேய்ந்து கொள்கிறது. இதனையடுத்து அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி மான்களுக்கு உணவு வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்வாறு வனவிலங்குகளுக்கு உணவளிப்பது சட்டத்தின்படி குற்றம் ஆகும். இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, முதுமலை வனப்பகுதியில் ஏற்பட்ட வறட்சியால் காட்டெருமைகள் மற்றும் காட்டு யானைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் இவ்வாறு உணவு தேடி அலையும் மான்களுக்கு அங்கு வரும் சுற்றுலா பயணிகள் உணவு வழங்குவது சட்டப்படி குற்றமாகும். ஏனெனில் இவ்வாறு வழங்கும் உணவின் மூலம் வன விலங்குகளின் உடல் நலம் பாதிக்கும் அபாயம் உள்ளதால் சட்டத்தை மீறி இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.