கேரள எல்லைக்குள் தமிழக ஆம்புலன்ஸ் அனுமதிக்கப்படாததால் வியாபாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்திலுள்ள கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளி என்னும் பகுதியை சேர்ந்தவர் தாகா. 56 வயதான இவர், திருவிழா நடைபெறும் இடங்களில் வியாபாரம் செய்து வருகிறார். அந்தவகையில் குமரி மாவட்டம் மண்டைக்காடு கோவில் திருவிழாவில் வியாபாரம் செய்ய நினைத்து அங்கு வந்து கடை அமைத்துள்ளார். ஆனால் திடீரென ஊரடங்கு விதிக்கப்பட்டதால் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல முடியாமல் அங்கேயே தங்கியிருந்து உணவு சமைத்து சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளார்.
இதையடுத்து அவரது காலில் பெரிய புண் ஏற்பட அது குணமடையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது. இதனால் அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், இவர் உறவினர்கள் கண்காணிப்பில் இருந்தால்தான் விரைவில் குணமடைவார் என்று நினைத்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் கேரள எல்லையில் உள்ள அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தி தமிழகத்தில்தான் வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. ஆகையால் அனுமதிக்க முடியாது என்று கூறி மீண்டும் தமிழகத்திற்குள் ஆம்புலன்ஸ் திருப்பி விடப்பட்டது. இதையடுத்து குமரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவரது உடல்நிலை பாதிப்பு மோசமாக,
குமுளியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாமாக உயிரிழந்தார். ஆம்புலன்ஸ் செல்ல அனுமதிக்கப்படாததால் தான் அவர் இறந்தார் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து இரு மாநில அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திய பின்பே அவரது உடல் சொந்த மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.