விவசாயி வீட்டில் நகை பணம் மற்றும் கார் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வள்ளிபுரம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவர் விவசாயியாக உள்ளார். இவருடைய மகன் குமரவேல். குமரவேல் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று காலையில் குமரவேல் மோகனூர் அருகே உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். பொன்னுசாமி தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
அந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த மர்மநபர்கள் வீட்டு மாடி வழியாக வீட்டிற்குள் புகுந்து பீரோவை உடைத்து அதிலிருந்த 14 பவுன் தங்க நகைகள் மற்றும் 1,75,000 ரூபாய் பணம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். மேலும் அங்கிருந்த சாவியை எடுத்து கொண்டு பொன்னுசாமிக்கு சொந்தமான காரில் தப்பி சென்றுள்ளனர். இந்நிலையில் மாலை 5 மணிக்கு வீட்டிற்கு வந்த குமரவேல் பீரோ உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து நகை ,பணம் மற்றும் கார் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.