இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை அடுத்த காந்தி நகர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் விளம்பர நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்போது சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த லாரி ஒன்று இவரது இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த சோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் உயிரிழந்த ராஜ்குமாரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ஸ்டாலின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக அரியானா மாநிலத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் அசித்கார் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்த ராஜ்குமாருக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளது. இச்சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.