SpaceX நிறுவனம் இந்த ஆண்டின் இறுதிக்குள் பொதுமக்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
Elon Musk-ன் SpaceX என்ற நிறுவனம் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து “இன்ஸ்பிரேஷன் 4” என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சாதாரண பொதுமக்கள் விண்வெளிக்கு செல்லலாம். SpaceX நிறுவனத்தின் இந்த திட்டம் தான் உலகின் முதல் all-civilian mission என்று தெரியவந்துள்ளது. விண்வெளிக்கு சென்று மீண்டும் பூமியில் தரை இறங்க டிராகன் விண்கலம் பயன்படுத்தப்படவுள்ளது. விண்வெளிக்கு சுமார் ஏழு பேரை சுமந்து செல்லும் திறன் கொண்டது இந்த டிராகன் விண்கலம்.
இந்த விண்கலத்தை அமெரிக்காவை சேர்ந்த Jared Isaccman என்ற தொழிலதிபர் விலைக்கு வாங்கியுள்ளார். இந்த திட்டத்தின் மூலம் அவர் முதன்முதலில் மூன்று சாதாரண பொது மக்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்ல இருக்கிறார். அவர்களில் ஒருவர் அமெரிக்காவின் செயின்ட் ஜூட் குழந்தைகள் நல மருத்துவமனையில் பணியாற்றும் ஒரு பெண் செவிலியர் என்று தெரியவந்துள்ளது. மற்றொருவர் அதே மருத்துவமனைக்கு அதிக அளவு நன்கொடை அளித்த நபர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.இந்த ஆண்டின் டிசம்பர் மாதத்திற்குள் “இன்ஸ்பிரேஷன் 4” என்ற திட்டத்தை செயல்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
தேர்வு செய்யப்பட்ட மூன்று பேரின் முழு விவரங்களும் விரைவில் அறிவிக்கப்படும் என்று SpaceX நிறுவனம் கூறியுள்ளது. மேலும் விண்வெளிக்கு செல்லும் பயணத்திற்கு முன்பு அவர்கள் மூன்று பேருக்கும் முறையான பயிற்சி வழங்கவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.