ஜெய்சால்மரிலிருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானமானது நேற்று டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. இதையடுத்து விமான பயணிகள் இறங்கும்போது, ஒருவர் விமானத்தின் இருக்கையில் “இந்த விமானத்தில் வெடிகுண்டு இருக்கிறது” என இந்தியில் எழுத்தப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதன் காரணமாக அச்சமடைந்த பயணிகள் உடனே விமானத்தில் இருந்து வெளியேறுவதற்கு முற்பட்டனர்.
இது தொடர்பாக தகவலறிந்த விமான நிலைய அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து பயணிகளை பத்திரமாக வெளியேற்றிவிட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் டெல்லி காவல்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சுமார் 2 மணிநேரமாக நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.