டிரைவரின் மரணத்தின் சந்தேகம் இருப்பதாக கூறி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சீர்ப்பாதநல்லூர் கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லாரி டிரைவரான எழிலரசன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் எழிலரசன் அப்பகுதியில் அவருடைய நண்பரான முருகன் மற்றும் தமிழரசனுடன் புஷ்பகிரி குளக்கரை பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது எழிலரசன் போதையில் கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார்.
இதனை அடுத்து எழிலரசனின் நண்பர்கள் அவரின் மாமனாரான சங்கருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி எழிலரசனின் மாமனார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எழிலரசனை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த எழிலரசனின் தாயாரான முத்தம்மாள் என்பவர் தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து எழிலரசனின் தாயார் முத்தம்மாள் மற்றும் மனைவி அபிநயா போன்றோர் கிராம மக்களுடன் இணைந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின்பு கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.