சாலை வசதி இல்லாததால் பிரசவ வலியால் அவதிப்பட்ட பெண்ணை 5 கிலோமீட்டர் தூரம் கட்டிலில் தூக்கி சுமந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சத்தீஷ்கர் மாநிலம் ஜப்லா கிராமத்தை சேர்ந்த பெண்ணொருவர் பிரசவ வலியால் துடித்த நிலையில் கிராம மக்கள் அவரைச் கட்டிலில் சுமந்து கொண்டு ஐந்து கிலோமீட்டர் தூரம் சென்று அதன் பிறகு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பிரதான சாலையில் இருந்து அந்த கிராமத்திற்கு போகும் வழியில் இரண்டு வடிகால்கள் இருக்கின்றது. அந்த இரண்டிலும் தற்போது தண்ணீர் அதிக அளவில் ஓடுவதால் வாகனங்கள் எதுவும் அந்த வழியாக செல்ல முடியாது. இதனால் அந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் மருத்துவமனைக்கு செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இத்தகைய சூழலில்தான் பிரசவ வலியில் துடித்த பெண்ணை கிராம மக்கள் சிரமப்பட்டு 5 கிலோ மீட்டர் தூரம் கட்டிலில் சுமந்து வந்துள்ளனர். இதுகுறித்து பகிச்சா ஜன்பாட்டின் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில் “இதற்கு முன்பும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அது குறித்த தகவல்களையும் நாங்கள் சேகரிக்கிறோம். தற்போதிருக்கும் மழைக் காலத்தின் முடிவில் இந்த இரண்டு வடிகால்களின் பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கும். அதோடு இந்த வருடத்தின் இறுதிக்குள் கட்டுமான பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது எனக் கூறினார்.