Categories
மாநில செய்திகள்

“விஜய் படம் என்பதால் போராட்டம் நடத்தவில்லை”… இல. கணேசன்..!!

விஜய் படம் என்பதால் நெய்வேலியில் மாஸ்டருக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தவில்லை என்று பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.

பிகில் படம் வருவாய் தொடர்பாக கடந்த 5 ஆம் தேதி நெய்வேலியில் நடைபெற்று கொண்டிருந்த ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்திலிருந்து சென்ற வருமான வரித்துறையினர் விஜயை சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து கொண்டு வந்து விசாரணையை தொடங்கினர். அதேபோல் விஜயின் மனைவி சங்கீதாவிடமும் வாக்குமூலம் பெற்றனர். அப்போது விஜய்  பிகில் சம்பளமாக 30 கோடி வாங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் நீலாங்கரை மற்றும் சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. 23 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனை நேற்று முன்தினம்  இரவு 8 மணியளவில் முடிவடைந்தது. இதில் பணம் ஏதும் கைப்பற்றப்படவில்லை.

இதையடுத்து நடிகர் விஜய் நேற்று காலை கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி என்எல்சி இரண்டாவது சுரங்கத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் மீண்டும் பங்கேற்றார். தளபதி படப்பிடிப்புக்கு திரும்பி விட்டார் என்பதால் விஜய் ரசிகர்கள் இனி பிரச்னையில்லை என்று நினைத்தனர். ஆனால் பிரச்சனை வேறு விதமாக வர ஆரம்பித்தது.அதாவது என் எல் சி இரண்டாவது சுரங்கத்தின் முன்பு 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் திடீரென்று நேற்று மாலை திரண்டு இங்கு படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்று போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

மேலும் அவர்கள் பாதுகாக்கப்பட்ட இடத்திற்கு அதிகாரிகள் எப்படி அனுமதி வழங்கலாம் என்றும், என் எல் சி சுரங்கம் பகுதியில் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. ஆனால் படக்குழுவினரோ பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பிப்.10 ஆம் தேதி வரை என் எல் சி இரண்டாவது சுரங்கத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி பெற்றிருந்தனர்.

இதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள் நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெறும் என்எல்சி முன் குவிந்தனர். படப்பிடிப்பு அனுமதி வழங்கியதற்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்திய நிலையில் ரசிகர்கள் ஆதரவாக களமிறங்கி கண்டனம் தெரிவித்தனர். அதே சமயம் பாஜகவுக்கு கண்டனம் தெரிவித்து விசிகவினரும் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது. பாஜகவின் இந்த செயல் திரையுலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. விஜயை பழி வாங்கவேண்டும் என்றே பாஜகவினர் இப்படி போராட்டத்தில் இறங்கியுள்ளனர் என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாஜகவின் மூத்த தலைவர் இல கணேசன் கூறியதாவது, விஜய் படம் என்பதால் நெய்வேலியில் மாஸ்டருக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தவில்லை. என்எல்சி சுரங்கம் பாதுகாப்பான பகுதி, ஏற்கனவே அங்கு நடந்த படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டது என்றார். மேலும் தைப்பூசத்திற்கு தமிழகஅரசு விடுமுறை அளிக்க வேண்டும் என சீமான் கேட்பது வேடிக்கையானது என்று தெரிவித்தார்.

 

Categories

Tech |